தமிழில் அதிகமாக க்ரைம் த்ரில்லர் வருவதில்லை. அப்படியே வருகிற படங்களும் அரைத்த மாவையே அரைத்து தலைவலியை ஏற்படுத்துவதுதான் மிச்சம். ஆச்சரியமாக பழையன கழிந்து புத்துணர்ச்சியுடன் வந்திருக்கிறது யாவரும் நலம்.
மாதவன் தனது அம்மா, மனைவி, அண்ணன், அண்ணி, குழந்தைகள் சகிதமாக புதிதாக வாங்கிய பிளாட்டுக்கு குடி வருகிறார். பிளாட் பதிமூன்றாவது மாடியில் இருக்கிறது. வீட்டிற்கு வந்த நாள்முதல் சில அமானுஷ்ய விஷயங்கள் வீட்டில் நடப்பதை உணர்கிறார் மாதவன். பயம் ஒரு நிழல் போல் அவர் மீது படர்வதை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் கே.குமார்.
WD
வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்த்த காற்றில் ஜன்னல்கள் அடித்துக் கொள்வது, வெள்ளை புடவை கட்டிய பெண், பாட்டுப் பாடுவது, நடு இரவில் கொலுசு சத்தம் கேட்பது போன்ற புராதன விஷயங்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பதில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
வீட்டிற்குள் செல்போனில் எடுக்கப்படும் தனது படம் தெளிவற்று இருப்பதை மாதவன் கண்டுபிடிக்கும் காட்சியில் மாதவனின் பயம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. இந்நிலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் யாவரும் நலம் என்ற தொடரில் தனது வீட்டில் நடக்கும் சம்பவங்கள் முன்கூட்டியே காட்டப்படுவதை மாதவன் கண்டுபிடிக்கிறார். இந்தத் தொடர் அவர்கள் வீட்டில் மட்டுமே ஒளிபரப்பாகிறது. (யாவரும் நலம் தொடரைப் தொடர்ந்து பார்க்கும் மாதவனின் அம்மா, மனைவி மற்றும் அண்ணிக்கு இந்த உண்மைகள் தெரியாமல் இருப்பது எப்படி?).
அந்தத் தொடரில்வரும் நடிகர்கள் முப்பது வருடங்களுக்குமுன் மாதவனின் பிளாட் இருக்கும் இடத்தில் வசித்தவர்கள். அவர்கள் வீட்டின் நம்பரான 13பி தான் மாதவன் வீட்டு நம்பரும். இந்த உண்மைகளுடன் அவர்கள் கொலை செய்யப்பட்ட விவரமும் தெரிய வருகிறது. அமானுஷ்ய கதை மெல்ல க்ரைம் கதைக்குள் நுழைகிறது.
அவர்கள் யாரால் ஏன் கொல்லப்பட்டார்கள்? இந்த கேள்விக்கான பதில் தெரியவரும்போது மாதவனின் பிரச்சனைகளுக்கும் முடிவு கிடைக்கிறது.
இறந்தவர்களின் ஆவி உயிருடன் இருப்பவர்களின் உடலில் புகுந்து தன்னை கொன்றவர்களை பழி வாங்கும் கதைகளை பார்த்திருக்கிறேhம். 21 ஆம் நூற்றாண்டில் மனிதனுக்குப் பதில் தொலை ஊடகங்களில் ஆவி புகுந்தால்... ? விக்ரம் கே. குமார் வித்தியாசமாக சிந்தித்ததன் பலன் நமக்கு நல்ல த்ரில்லர் ஒன்று கிடைத்திருக்கிறது.
படத்தின் நிஜ ஹீரோ ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். த்ரில்லருக்கேயுரிய க்ரே நிற டோனை பயன்படுத்தியிருப்பது படத்தின் ரிச்னெஸ்சை கூட்டுகிறது. உறுத்தாத வித்தியாசமான கோணங்கள். இசையைவிட பி.சி.யின் ஒளியும், இருளும் நம்மை அதிகமாக பயமுறுத்துகிறது. மாதவன் அதிர்ச்சியடையும்போது கேமாரா அளவுக்கதிகமாக நடுங்குகிறது. அதேபோல் டாக்டரை காண்பிக்கும் சில காட்சிகளில் ஊஞ்சல்போல் ஒரு தினுசாக ஆடுகிறது. இரண்டுமே கதைக்கு வெளியே நம்மை இழுத்து விடுகின்றன.

மாதவன் மீண்டுமொருமுறை தனது திறமையை நிரூபித்திருக்கிறார். பயம், தவிப்பு இரண்டையும் அவரது கண்களே வெளிப்படுத்துகின்றன. சமையல் புத்தகம் என்று சொல்லி மனைவிக்கு காமசூத்ரா புத்தகம் பரிசளிப்பதும், போகத்துக்கு தந்தூரி சிக்கன், சிக்கன் 69 என பெயரிட்டு அழைப்பதும்... ஜில்.
மாதவனின் மனைவியாக வரும் நீது சந்திராவுக்கு அதிக வேலையில்லை. (குளோசப் காட்சியில் அவரது உதட்டசைவுக்கும் டப்பிங்குக்கும் சம்பந்தமே இல்லை. கவனித்திருக்கலாம்). மாதவனின் அம்மாவாக சரண்யா. அவரை அழ வைக்காமல் குதூகலமாக காட்டியதற்கே இயக்குனரை பாராட்டலாம். மாதவனின் நண்பராக வரும் போலீஸ் அதிகாரி, மனநலம் தவறியவர், வக்கீலாக வரும் சம்பத், டாக்டராக வருகிறவர் என அனைவரும் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
பதிமூன்றுக்கு மேல் மாடிகள் இருக்கும் அபார்ட்மெண்டில் நாயுடன் திரியும் கண் தெரியாத பெரியவர், வாட்ச்மேன் தவிர்த்து வேறு யாருமேயில்லையா? இத்தனைக்கும் அந்த அபார்ட்மெண்டும், லிப்டும் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது.
தனது வீட்டில் நடக்கப் போகும் சம்பவங்களை தொலைக்காட்சி தொடர்மூலம் தெரிந்து கொள்கிறார் மாதவன். கிளைமாக்ஸில் கனவு மூலமாகவும் சில விஷயங்கள் அவருக்கு தெரிய வருகிறது. இது தேவையில்லாத குழப்பத்தை திரைக்கதையில் ஏற்படுத்துகிறது.
தனது வீட்டிலுள்ளவர்களை விமானத்தில் எங்காவது அனுப்பி வைக்கும்படி மாதவன் கேட்பதும், அவரது போலீஸ் நண்பரும், டாக்டரும் அதற்கு உடனடியாக ஒத்துக் கொள்வதும் நம்பும்படி இல்லை. கொலைகாரன் யார் என்பதை மாதவன் தெரிந்து கொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே பார்வையாளர்களால் யூகித்துக் கொள்ள முடிகிறது.
வழக்கமான த்ரில்லரிலிருந்து எல்லா வகையிலும் மாறுபட்டிருக்கும் இந்தப் படத்தின் பின்னணி இசையில் மட்டும் மாற்றமில்லை. அதே வழமையான இரைச்சல்.. பேரிரைச்சல். இரண்டே பாடல்கள் என்பது பெரிய ஆறுதல். (அந்த இரண்டையும்கூட தவிர்த்திருக்கலாம்). இயல்பான வசனங்களும், ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்கும் படத்தின் குறிப்பிடத்தகுந்த அம்சங்கள்.
ஆவிகள் ஸ்கிரின் ப்ளே எழுதி சீரியல் ஒளிபரப்புமா என்பதான சின்னச் சின்ன லாஜிக் நெருடல்கள் இருந்தாலும் தமிழ் த்ரில்லர்களுக்கு முதல்முதலாக ஒரு அந்தஸ்தை ஏற்படுத்தி தந்திருக்கிறது யாவரும் நலம். கை குலுக்கி வரவேற்கலாம்.
No comments:
Post a Comment